திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் விரைவில்: கஞ்சன விஜேசேகர
திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை அவர் அதிபர் ஊடக மையத்தில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,கடந்த ( 2024.03.05 ) ஆம் திகதி நள்ளிரவு முதல் மின்சார கட்டணத்தை 21.9% இனால் குறைக்க முடிந்ததுடன் 30 அலகுகளுக்கு குறைவான மின் பாவனையாளர்களின் மின் அலகு ஒன்றுக்கான விலை 33% இனால் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 31–60 அலகுகளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு அலகு ஒன்றுக்கு 28% இனால் கட்டணம் குறைந்துள்ளதுடன் 60–90 அலகுகளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு 30% கட்டண குறைப்புச் செய்யப்பட்டுள்ளது.
கட்டண குறைப்பு
இத்துடன் 90–180 இடையிலான பாவனையாளர்களுக்கு 24% இனால் கட்டண குறைப்புச் செய்யப்பட்டதுடன் 180 அலகுகளுக்கு மேலான வீட்டு பாவனையாளர்களுக்கு 18% கட்டண குறைப்பும் வழிபாட்டுத் தலங்களுக்கு 33% கட்டண குறைப்பும் ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைகளுக்கு 18% கட்டண குறைப்பும் அரச துறைக்கு 23% கட்டண குறைப்பும் மற்றும் தனியார் துறைக்கு 22% கட்டண குறைப்பும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அதற்கு நிகராக உணவு விலைகள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குரியாக உள்ளதுடன் பொது சேவைகளில் ஈடுபடுவோரால் மக்களுக்கு பெருமளவான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
அதனை மின்சார சபையோ அல்லது அமைச்சுக்களோ செய்ய முடியாது உள்ளதோடு அண்மைக் காலமாக கிடைத்த பெரும் மழைவீழ்ச்சியின் காரணமாக மின் உற்பத்தி செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளை குறைந்துள்ளது.
அதன் பலனாக 2022 ஆம் ஆண்டின் 270 பில்லியன் ரூபா இழப்பீட்டையும் அதனால் சரிசெய்ய முடிந்தாலும் இருள் யுகத்தில் கிடந்த நாடு பொருளாதார முன்னேற்றம் கண்டு வருவதன் பலனாகவே மின்சார கட்டணத்தை குறைக்க முடிந்துள்ளது.
அதனால் மின்சார உற்பத்திச் செலவு பெருமளவில் குறைவடைந்துள்ளதோடு மூன்றிலக்க பெறுமதியாக காணப்பட்ட வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளமையும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளதுடன் இந்திய கடனின் கீழ் பெறப்பட்ட 100 மில்லியன் டொலர்களில் முதல் பகுதியைக் கொண்டு பாடசாலைகள், பாதுகாப்பு முகாம்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் மின்சாரம் பெறுவதற்கு சூரிய சக்தி படலங்களை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.
காற்றாலை
மின் கட்டணத்தை மேலும் குறைக்க தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அல்லது தற்போது அதிக விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதை விடுத்து குறைந்த செலவிலான மாற்று முயற்சிகளுக்கு செல்வதுடன் 2025 ஆம் ஆண்டில் சியாம்பலாண்டுவ மின் உற்பத்தித் திட்டத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதனால் நூறு மெகாவோட் மின்சாரத்தை 25–26 ரூபாய்க்கு பெற்றுகொள்ளவதுடன் இதேபோன்ற பல பாரிய மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருவதுடன் அதற்காக ஏராளமான முதலீட்டாளர்கள் எம்மோடு இணைந்துகொண்டுள்ளனர்.
மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புதிய முதலீட்டாளர்களுக்காக 10 காற்றாலை மற்றும் சூரிய ஒளி திட்டங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் பகுதியை மையமாக கொண்டு 50 மெகாவாட் காற்றாலைக்கான விலைமனு அடுத்த வாரம் கோரப்படும்.
அததோடு உரியவர்களுடன் கலந்துரையாடி எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையினையும் மேலும் குறைக்க எதிர்பார்ப்பதுடன் மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
இதன்படி, புதிய சட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் மாற்றங்களை உரிய தரப்பினரும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கத்தினரும் சுட்டிக்காட்டியிருந்ததுடன் இது தொடர்பான 46 திருத்தங்களுடன் கூடிய சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையால் அதனையடுத்து அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |