அமெரிக்காவில் நான்கு கோடி பேருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அமெரிக்காவை வாட்டி வதைத்து வரும் 'ஹீட் டோம்' எனப்படும் அதி தீவிர வெப்பத்தால், அந்நாட்டின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளதுடன் சுமார் நான்கு கோடி மக்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களான மின்னசோட்டா முதல் மிசிசிபி வரையிலும், மேற்கில் நெவேடா மற்றும் தெற்கு கலிபோர்னியா வரையிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
வரலாற்று சாதனையாக, 44 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை
காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை இணைத்து கணக்கிடப்படும் 'ஹீட் இண்டெக்ஸ்' அளவு பல இடங்களில் 38 டிகிரி செல்ஷியசைத் தாண்டி பதிவாகி மக்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

ரேபிட் சிட்டியில் வரலாற்று சாதனையாக, 44 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மின்னசோட்டாவில் வெப்பத்தின் கொடூரம் தாங்க முடியாமல் புகழ்பெற்ற குதிரைப் பந்தயங்கள் உட்பட பல வெளிப்புற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வெயிலின் தாக்கம் 49 டிகிரி செல்ஷியஸ் வரை உயரக்கூடும்
அமெரிக்க தேசிய வானிலை மையம் அளித்துள்ள எச்சரிக்கையில், வெயிலின் தாக்கம் 49 டிகிரி செல்ஷியஸ் வரை உயரக்கூடும் என, தெரிவித்துள்ளது. திடீரென இந்த அளவுக்கு வெயில் அதிகரிக்க, 'ஹீட் டோம்' எனப்படும் உயர் அழுத்த வெப்ப மண்டலம் தான் காரணம் என வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பூமியின் மேற்பரப்பில் சூடான காற்றை வெளியேற விடாமல் ஒரு கூம்பு போல அடைத்து வைத்துக் கொள்கிறது. இதனால் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வதோடு, காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் தடுத்து நிறுத்தி, மக்களை புழுக்கத்தில் தவிக்க வைக்கிறது. இதனால், 4 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையின் கீழ் முடங்கியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |