இலங்கைக்கு கரம் கொடுத்த அமெரிக்கா: வலுப்படுத்தப்பட்ட இரு நாடுகளுக்கிடையிலான உறவு
அமெரிக்காவின் முழுமையான ஆதரவானது இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பிற்கு கிடைக்குமென ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன்(Jake Sullivan) உறுதியளித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் (Sagala Ratnayaka) நேற்று(10) நடந்த தொலைபேசிக் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேசிய பாதுகாப்பு
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் பாராட்டியுள்ளார்.
அத்தோடு சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்ட பொது நிதி, பணம் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிராந்தியத்தில் சமாதானம்
அத்தோடு எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் அர்பணிப்பாக பணியாற்றுவதாக சலிவன் தெரிவித்ததாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |