அம்பாறையில் குடும்பஸ்தர் மாயம்- குளக்கரையில் மீட்கப்பட்ட ஆதாரங்கள்!
அம்பாறையில் குளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மாயமாகியுள்ளார் என திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்டானை இத்திக் குளத்தில் குளிக்கச் சென்ற நபரை முதலை இழுத்துச் சென்றிருக்கலாம் என திருக்கோவில் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகள் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் மண்டானை இத்திக் குளத்தில் குளிக்கச் சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே மாயமாகியுள்ளார்.
இவ்வாறு மாயமானவர் மண்டானை குடிநிலம் வீட்டுத் திட்ட கிராமத்தைச் சேர்ந்த 62 வயதுடைய காத்தமுத்து மேகநாதன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளக்கரையில் அவருடையது என கருதப்படும் சாரம் சேட் மற்றும் பாதணிகள் என்பன இருந்ததாகவும், அவற்றை வைத்தே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணாமல் போய்யுள்ள குடும்பஸ்தரைத் தேடும் பணிகள் மீனவர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கடற்படையினரின் உதவியையும் கோரவுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.திலகரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.