ஆர்க்டிக் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் கையெழுத்தானது புதிய ஒப்பந்தம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெடெரிக்சன் மற்றும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரெடெரிக் நீல்சன் ஆகியோர் கிரீன்லாந்தில் அமெரிக்காவின் இராணுவப் பிரசன்னத்தை அதிகரிக்க அனுமதிக்கும் புதிய முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரை முன்னிட்டு நியூயோர்க்கில் நடைபெற்ற நிகழ்வில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
கிரீன்லாந்தை அமெரிக்கப் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற ட்ரம்பின் முன்னைய கோரிக்கையை இந்த ஒப்பந்தம் ஏற்கவில்லை.
சீனாவின் அதிகரித்து வரும் நடவடிக்கை
எனினும், ஆர்க்டிக் பிராந்தியத்தில் ரஷ்யா மற்றும் சீனாவின் அதிகரித்து வரும் நடவடிக்கைகளுக்கு மத்தியில், கிரீன்லாந்தில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்துகிறது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய ட்ரம்ப், “புதிய ஒப்பந்தம் கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் பிற தேவைகள் தொடர்பாக அமெரிக்காவுக்கு நிரந்தர கட்டுப்பாட்டை” வழங்குவதாகக் கூறினார்.
அமெரிக்காவின் வெளிப்படையான எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, அமெரிக்காவின் எதிரி நாடுகள் கிரீன்லாந்தில் இராணுவப் பிரசன்னத்தை ஏற்படுத்தவோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்த முதலீடுகளை மேற்கொள்ளவோ அனுமதிக்கப்படாது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
இதனிடையே, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெடெரிக்சன், இந்த ஒப்பந்தம் நீண்டகாலத்திற்கு நீடிக்கக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவித்ததுடன், NATO கூட்டணியின் முக்கியத்துவத்தையும் கிரீன்லாந்தின் சுயநிர்ணய உரிமையையும் இந்த ஒப்பந்தம் மதிப்பதாகக் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |