காவல்துறை கோரியது கால அவகாசம் : மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் நவம்பர் 10 ஆம் நாளுக்கு திகதியிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (22.09.2026) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
காவல்துறை கோரிய கால அவகாசம்
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினனர் தமது சான்றுகளை சமர்ப்பித்ததுடன், மேலதிக சாட்சியங்கள் மற்றும் தடயங்களைத் திரட்டுவதற்கு மேலும் கால அவகாசம் கோரினர்.

இதேநேரம் கடந்த ஜூலை 28ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின்போது, சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடம் தொடர்பான சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வு செய்து திரட்டி சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இருந்தும் மீண்டும்காவல்துறையினர் இன்றையதினமும் கால அவகாசம் கோரியிருந்தனர்.
நீதிமன்றின் உத்தரவு
இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதிக்கு மீண்டும் திகதியிடப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின்போது வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து கிருஸ்னபெலினா, காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபை உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் உள்ளிட்டோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |