400 ஏக்கர் காணியை அடாத்தாக பிடித்துள்ள தனிநபர் - விரைந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எடுத்த நடவடிக்கை
வவுனியா பனிக்கர் புளியங்குளம் கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் அரச காணியினை தனிநபர் ஒருவர் அனுமதியின்றி சுவீகரித்துள்ள நிலையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா பரண்நட்டகல் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பனிக்கர் புளியங்குளம் கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் அரச காணியினை தனிநபர் ஒருவர் அனுமதியின்றி சுவீகரித்து அக்காணியினை துப்பரவு செய்துள்ளார்.
பிரதேச செயலாளர் மூலம் கிராம சேவையாளர் குறித்த காணி அரசகாணி என்றும், இதில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாமென்றும், அக் காணியில் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டும் அந்த துண்டுப்பிரசுரம் குறித்த நபரால் கிழித்தெறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டும் பொலிசார் தடுப்பதற்கு எதுவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இத்தகவலையறிந்து குறித்த இடத்திற்கு இன்றையதினம் சென்ற வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் பிரதேச செயலாளரை தொடர்புகொண்டு கிராமசேவையாளர் மூலம் குறித்த நபர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யும்படியும், அடாத்தாக காணி பிடித்தவரை தொடர்புகொண்டு அவரிடம் ஆவணம் இருந்தால் பிரதேச செயலாளரிடம் காண்பித்து அவருக்குரிய காணியை பெற்றுக்கொள்ளுமாறும், அடாத்தாக போடப்பட்ட கொட்டிலை அகற்றுவதோடு, வேலி போடுவதற்கு எடுக்கும் முயற்சியை நிறுத்துமாறும், இக்காணிக்குள் எவ்வித வேலைத்திட்டமும் செய்ய வேண்டாமென்றும் குறித்த நபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஓமந்தை பொலிசாரிடம் அடிக்கடி இப்பகுதியை பார்வையிடுமாறும், குறித்த நபரால் மரங்கள் வெட்டப்பட்டோ அல்லது வேறு வேலைத்திட்டங்கள் நடந்தாலோ பொலிஸாரே பொறுப்புக்கூறவேண்டிவரும் எனவும் தெரிவித்திருந்தார்.
குறித்த காணியின் ஒருபகுதிக்குள் இக்கிராமங்களை சேர்ந்த காணியற்ற குடும்பங்களையும், உபகுடும்பங்களையும் குடியேற்ற உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.