சவுதி விமான நிலையங்களை பயங்கரமாக தாக்கும் ஹவுதி - இலங்கையர்களுக்கு தூதரகம் விசேட அறிவிப்பு
சவுதி அரேபியாவின் ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் யேமனின் ஏடன் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஹூதி தாக்குதல்களைத் தொடர்ந்து பல விமான நிறுவனங்கள் தமது விமான பயணங்களை இரத்துச் செய்துள்ளன.
சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள 'கிங் காலித்' சர்வதேச விமான நிலையத்தை குறி வைத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று பயங்கர ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கேப்டன் ஹமூத் அலி அல்-கல்தாமி உட்பட 3 பேர் உயிரிழந்ததாக, சவுதி அரசு உறுதி செய்துள்ளது.
இத்தாக்குதலால் விமான சேவைகள் பல மணி நேரம் ரத்து செய்யப்பட்டு, தலைநகர் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.
பாதுகாப்பு அறிவுறுத்தல்
இந்நிலையில், சவுதிஅரேபியாவில் வசிக்கும் மற்றும் அந்தநாட்டுக்குச் செல்லும் இலங்கையர்கள், அந்தநாட்டு அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், காணொளிகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளைப் பகிர்வதைத் தவிர்த்து, நம்பகமான தகவல் மூலங்களை மாத்திரம் பயன்படுத்துமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜெட்டாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் பொதுவான பணிகள் வழமைபோன்று இடம்பெறுகின்றன.
தூதரகச் சேவைகள் தொடர்பான அவசர உதவிகளுக்கு 054 947 7567 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |