யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டமையே கறுப்பு ஜுலை கலவரத்தின் ஆரம்பம் : இளங்குமரன் எம்.பி
1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவமே 1983 கறுப்பு ஜூலை பேரழிவின் ஆரம்பமாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துளார்.
கறுப்பு ஜூலை இனக்கலவரம் என்பது அது அரசியல் இலாபத்திற்காகவும், இனங்களுக்கிடையே பிரிவினையைத் தூண்டுவதற்காகவும் அப்போதைய ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு சதியாகும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம்
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 1983 கலவரத்திற்கு முன்னதாக நாட்டில் என்ன நடந்தது என்பதை நாம் ஆழமாக ஆராய வேண்டும். 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவமே இந்த பேரழிவின் ஆரம்பமாகும்.
அன்று நூலகம் மட்டுமின்றி, தமிழ் மக்களின் ஜனநாயக வாக்குரிமையையும் சேர்த்துதான் எரித்துச் சாம்பலாக்கினார்கள். யாழ்ப்பாணத்தில் தங்களால் வாக்குரிமையைப் பெற முடியாது என்ற அச்சத்தில் வாக்குச்சீட்டுகளை எரித்த அரசியல்வாதிகள் தான் இன்றைக்கு எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்.

வன்முறைக்கு அன்றைய அரசாங்கம் உரிய நீதியைப் பெற்றுத் தந்திருந்தால், 1983 ஆம் ஆண்டு இந்த நாட்டில் அத்தகையதொரு இனக்கலவரம் நிகழ்ந்திருக்காது.
ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அதைத் தடுக்க எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை. கடந்த 43 ஆண்டுகளாக நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் பிரதிநிதிகள் எவரும் இதற்காக முழுமையான குரல் கொடுக்கவில்லை.
அன்றைய ஆட்சியாளர்களிடம் நீதி கிடைக்காது என்பதை அவர்களும் அறிந்தே இருந்தனர். இங்கு நாம் ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.தமிழ் மக்கள் ஒருபோதும் ஒட்டுமொத்த சிங்கள மக்களால் பாதிக்கப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
கலவரத்தின் போது கொழும்பில் வசித்த பெரும்பாலான தமிழ் மக்களை, அங்குள்ள சிங்கள மக்களே தங்களது வீடுகளில் வைத்துப் பாதுகாப்பாகக் காப்பாற்றினார்கள்.
எனவே இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் பிரிவினைவாதச் சதியாகும். யாழ்ப்பாணத்தில் பல்வேறு ஆயுத இயக்கங்கள் உருவானதற்கும், தமிழ் மக்கள் அளப்பரிய இன்னல்களைச் சந்தித்ததற்கும் அன்றைய ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளே முதன்மைச் சான்றாகும்.

இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்தே, தங்களது சுயநல வாக்கு வங்கிக்காகவே அரசியல்வாதிகளால் இனவாதம் வளர்க்கப்பட்டது. தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என மக்கள் பிரிந்து கிடந்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.
ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்த ஆட்சியின் மூலமாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வும் நீதியும் கிடைக்கும்.
இனிவரும் காலங்களில் தமிழ், சிங்கள மக்களிடையே இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழக் கூடாது. இந்த வரலாற்றுப் பிழையான கறுப்பு ஜூலை சம்பவத்திற்கு உண்மையான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் போது தான், நாட்டில் ஒரு சமத்துவமான மற்றும் நியாயமான எதிர்காலச் சந்ததியை உருவாக்க முடியும்“ என தெரிவித்தார்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |