கூட்டத்தில் ஆவேசமாக உரை ஆற்றிய விமல் வீரவன்ச - பாயவுள்ள சட்ட நடவடிக்கை
அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றிய போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில், நீதிமன்ற உத்தரவு தொடர்பாக விமல் வீரவன்ச ஆற்றிய உரை குறித்து எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலேயே, வீரவன்சவுக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணை
கொழும்பு தலைமை நீதிவான் அசங்க போதரமவினால் காவல்துறை மா அதிபருக்கு வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ பணிப்புரையின் பேரில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, காவல்துறையினர் ஏழு தொலைக்காட்சி அலைவரிசைகளிலிருந்து வீரவன்சவின் உரையின் திருத்தப்படாத காணொளிக் காட்சிகளைப் பெற்றனர்.
அத்துடன் பேரணி ஏற்பாட்டாளர்கள், அறிவிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், பாதுகாப்புக்காகப் பணியமர்த்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் ஒலி உபகரணங்களை வழங்கிய நபர் ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து காவல்துறை, விசாரணை முடிவுகள், சாட்சி வாக்குமூலங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. சம்பந்தப்பட்ட ஆவணங்கள் தற்போது நீதிமன்றப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |