புதிய கல்வி சீர்திருத்தங்கள் : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.
குறித்த கலந்துரையாடல், கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கைக் குழுவின் பிரதிநிதிகளுடன் நேற்று (08) அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், புதிய கல்வி சீர்திருத்தத்தினூடாக அழகியல் பாடங்கள், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி ஆகியவை நீக்கப்படாது என தெரிவித்துள்ளார்.
கல்வி முறை
அத்தோடு கல்வியை மாற்றுவோம், இலங்கையை மாற்றுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கல்வி முறையில் உள்ள பலவீனங்களைச் சமாளித்து, புதிய கல்விச் சீர்திருத்தங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தும், அதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு முறை
முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்புவரை, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புவரை, பத்தாம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்புவரை கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பாலர் பாடசாலைக் கல்வி விருத்தி, தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆகிய துறைகளில் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாடத்திட்டத் திருத்தம், பாட உள்ளடக்கம், கல்வி, பாடசாலைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர் பயிற்சி, அணுகுமுறை, கல்வித் துறையில் தொழில்முறை விருத்தி, மதிப்பீட்டு முறைகளைச் சீர்திருத்துதல் மற்றும் கல்விக் கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)