கொரோனா தடுப்பூசிக்கு கைமாறு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம்? அரசாங்கம் வழங்கிய பதில்
இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் கொரோனா தடுப்பூசிகளை தனியார் தரப்பினருக்கு பகிர்ந்தளிப்பது குறித்து இதுவரையில் எவ்வித பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை.
தடுப்பூசி தொடர்பில் சுகாதார தரப்பினர் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்துவார்கள் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால உறவு மற்றும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு முகங்கொடுக்கும் போது, கடந்த ஒருவருட காலத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கு அரசாங்கம் பாராட்டையும் நன்றிகளையும் தெரிவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பெற்றுக் கொள்ளப்படும் கொரோனா தடுப்பூசிகளை முதலில் சுகாதார தரப்பினருக்கும், இரண்டாவதாக பாதுகாப்பு தரப்பினருக்கும், மூன்றாவதாக வயது முதிர்ந்தோருக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை தனியார் தரப்பினர் ஊடாக விநியோகிக்க இதுவரையில் எவ்வித பேச்சுவார்த்தையும் எடுக்கப்படவில்லை. சிறந்த திட்டமிடலுக்கமைய கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். அரசாங்கம் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கு கைமாறு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் மற்றும் இதரகாரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் இருந்து தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.