அநுரவும் குமார ஜயகொடியும் சிறைசெல்ல நேரிடும் : விமல் வீரவன்ச சூளுரை
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற நிலக்கரி விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி எதிர்காலத்தில் சிறைசெல்ல நேரிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நிலக்கரி கொள்வனவு குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி பூரண அதிகாரமிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார். முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை பாதுகாப்பதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல கைது
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதனை ஆராய்வதற்கு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கவில்லை.

அதேபோல் 1978 ஆம் ஆண்டு முதல் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகள் குறித்து ஆராயுமாறு குறிப்பிடவில்லை.
கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது. விசாரணைகள் முறையாக இடம்பெற்றது. பதவியில் இருக்கும்போதே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் குமார ஜயகொடி விவகாரத்தில் இவ்வாறு ஏதும் நடக்கவில்லை.
நிலக்கரி விவகாரம்
தரமற்ற நிலக்கரி குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு ஒருபோதும் உண்மையை வெளிப்படுத்தாது. உண்மையை மூடிமறைப்பதற்காகவே ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படும். கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலைமையே காணப்பட்டது.

தரமற்ற நிலக்கரி விவகாரத்தில் ஜனாதிபதி உட்பட குமார ஜயகொடி எதிர்காலத்தில் சிறைசெல்ல நேரிடும். அடுத்த அரசாங்கத்தில் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் வழக்குத் தாக்கல் செய்வோம். இந்த அரசாங்கத்தில் எந்த நிறுவனங்கள் மீதும் எமக்கு நம்பிக்கையில்லை” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |