மன்னாரில் காற்றாலைகளை நிறுவுவதில் அநுர அரசு உறுதி
ஜனாதிபதியை சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்தினேன்.எனினும் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்த 14 காற்றாலைகளையும் மன்னார் தீவில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கிறார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று வியாழக்கிழமை (9) மாலை சர்வமத குழு,பொது அமைப்புக்கள்,போராட்டக்குழு ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியை சந்தித்தேன்
நான் ஜனாதிபதியை சந்தித்தேன்.இதன் போது காற்றாலை தொடர்பான எமது பிரச்சனையை அவரிடம் முன் வைத்தேன். ஜனாதிபதியை சந்திப்பதற்கு நான் அரச அதிபரோடு இணைந்து இந்து மற்றும் இஸ்லாமிய மத குருக்களையும் அழைத்துச் செல்வதாக இருந்தோம்.
ஆனால் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நான் ஜனாதிபதியை மூன்றாவது தடவையாக சந்தித்தேன்.முதல் தடவையாக தனியாகவும்,இரண்டாவது தடவையாக ஆயர் மன்றத்துடன் இணைந்து சென்று சந்தித்தோம்.
இந்த பிரச்சினையை நான் இலங்கை ஆயர் மன்றத்திற்கும் எடுத்துச் சொன்னேன்.இலங்கை ஆயர் மன்றம் எங்களுடன் இணைந்து செயல்பட்டார்கள்.கருதினால் முன்னெடுப்பாலும் ஆயர் மன்ற தலைவர் ஆகியோரினால் உடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பிற்கும் சென்றேன்.
இறுதியாக கடந்த 2 தினங்களுக்கு முன் ஜனாதிபதியை தனியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அனைவரோடும் இணைந்து செல்வதாக இருந்தும் அந்த செயல்பாடு எனக்கு கைகொடுக்கவில்லை.
14 காற்றாலைகளை மன்னாரில் அமைப்பதில் உறுதி
இருந்தும் நான் தனியாக சென்று குறித்த விடயம் குறித்து கதைத்த போது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்றால் அவர்கள் குறித்த 14 காற்றாலைகளையும் மன்னார் தீவில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கின்றார்கள்.
நான் அங்கு எந்தவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை.நான் எங்களுடைய மக்களின் நிலைப்பாட்டையும்,மன்னாரில் ஏன் காற்றாலை வேண்டாம் என்று மக்கள் கூறுகிறார்கள் என்ற நிலைப்பாட்டையும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினேன்.
எனினும் அவருடைய நிலைப்பாடு என்னவென்றால் குறித்த 14 காற்றாலை களையும் அமைத்ததன் பின்னர் மன்னாரில் கனிய மணல் அகழ்வையோ அல்லது மேலதிக காற்றாலைகளையோ ஒரு போதும் அனுமதிப்பதில்லை என்ற வாக்குறுதியை அவர் மீண்டும், மீண்டும் கூறினார்.
கனிய மணல் அகழ்வு மன்னாரில் முற்றாக இல்லை
கனிய மணல் அகழ்வு மன்னாரில் முற்றாக இல்லை என்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.
அமைச்சரவை ஊடாக அதனை எமக்கு உறுதிப்படுத்தி தருவதாகவும் குறித்த 14 காற்றாலைகளையும் மக்கள் அனுமதிக்கின்ற போது எந்த ஒரு அரசாங்கமும் இச் சிறிய தீவில் கனிய மணல் அகழ்வு மற்றும் மேலதிக காற்றாலை அமைத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப் போவதில்லை.அதற்கும் அமைச்சரவை ஊடாக உறுதிமொழி வழங்குவேன் என கூறினார்.
எது எப்படியாக இருந்தாலும் நான் மன்னாரில் மக்களை சந்தித்ததன் பிற்பாடு இதற்கான நடவடிக்கையை எடுக்கலாம் என்று கூறி விட்டு அங்கிருந்து வந்தேன்.நாங்கள் எவ்வித ஆவணத்திலும் கையொப்பம் இடவில்லை.
எனினும் உண்மைக்கு புறம்பான செய்திகள் இணைய ஊடகங்களில் வெளி வந்துள்ளது.
நான் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.தாங்களாகவே ஊகித்து வெளியிட்ட செய்தியாக அமைந்துள்ளது.போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களுடனும்,மக்களுடனும் இன்னும் கலந்துரையாட வேண்டி உள்ளது.அதன் பின்னர் நாங்கள் ஒரு நிலைப்பாட்டிற்கு வருவோம்.என மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
