மன்னார் மக்களை மிலேச்சத்தனமாக தாக்கிய அநுர அரசாங்கம் : எழுந்துள்ள கண்டனம்
மன்னாரில் (Mannar) காற்றாலை மற்றும் கனிய அகழ்வு திட்டத்திற்கு எதிராக 55 நாட்களுக்கு மேல் போராடிக்கொண்டிருக்கும் மக்களை நேற்றிரவு அடித்து துன்புறுத்தி புரிந்த கீழ்த்தரமான செயல் மூலம் அநுர அரசாங்கம் தங்களை நிரூபித்துள்ளார்கள் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”மன்னார் தீவு மக்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக மன்னார் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து முடிவுக்கு வருவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
கடுமையாக எதிர்த்த மக்கள்
இந்தநிலையில் எரிசக்தி அமைச்சர் தலைமையிலான குழுவினர் மன்னார் தீவுக்கு சென்று மக்களிடம் கருத்து கேட்ட போது மக்கள் அத்திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
அண்மையில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் போராடி முழு நாட்டிற்கும் தமது கோரிக்கையை வெளிப்படுத்தி இருந்தனர். இவை அனைத்தையும் புறந்தள்ளி காற்றாலை திட்டத்திற்குரிய டர்பைன் மற்றும் விசிறிகளை நேற்று இரவு மன்னார் தீவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
அரச அடக்கு முறை
அதனை தடுக்க முயன்ற பெண்கள், இளைஞர்கள், பாதிரிமார்கள் உட்பட மக்களை அடித்து காயப்படுத்தி கேவலமான அரச அடக்கு முறையை அநுரவின் காவல்துறை படை மேற்கொண்டதை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.
இச் செயல் மூலம் அரசாங்கம் உழைக்கும் மக்கள் பக்கம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கின்றனர். மின்சார துறையின் ஏகபோக அதிகாரத்தை அதானி குற்றங்கும்பல் கம்பனிக்கு வழங்கி மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்களை சுரண்டும் திட்டத்தை கைவிட வேண்டும்.
இத்திட்டத்தை தடுத்து நிறுத்த தொடர்ந்து போராடும் மன்னார் தீவு மக்களோடு இணைந்து நாட்டின் ஏனைய அனைத்து சக்திகளும் போராட முன்வர வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்றாலைக்கு எதிராக திரண்டவர்கள் மீது கொடூர தாக்குதல்: கால்களால் மிதிக்கப்பட்ட பெண்கள் - இறக்கப்பட்ட அதிரடிப்படையினர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
