இலங்கை அதிபர் தேர்தல்: ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போகும் ஜேவிபி
இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலின் ஊடாக நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி அல்லது ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“இலங்கை தற்போது எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் முதல் நடவடிக்கையாக ஆட்சி மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதிபர் தேர்தல்
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பது இந்த பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வாக அமையாது.
பிரச்சினைகளுக்கான தீர்வு காணும் நடவடிக்கையின் முதல் படியாக எமது கட்சி ஆட்சி அமைப்பது இருக்கும். அரசியல் மாற்றமொன்று இலங்கைக்கு தேவை.
இந்த ஆண்டு இதற்கான சிறந்த ஆண்டு. செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்குள் இலங்கையில் அதிபர்த் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன்படி, செப்டெம்பர் 28 அல்லது ஒக்டோபர் 5 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடத்தப்படும்.
ரணில் விக்ரமசிங்க
எனினும், தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு தேர்தல்களை நடத்துவரா எனும் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், தேர்தல் நடத்தப்பட்டால் ரணில் விக்ரமசிங்கவால் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் வீட்டுக்கு செல்ல முடியும். எனினும், தேர்தல் நடத்தப்படாது என ரணில் அறிவித்தால், அதற்கு அடுத்த நாளே அவர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்.
தேர்தல் நடத்தப்படாது ஒரு ஆட்சி நடத்தப்படுமாயின், அது சதித்திட்டங்களால் முன்னெடுக்கப்படும் ஆட்சி. இந்த பேச்சுக்கு நாம் இடமளிக்க மாட்டோம்.
அனுரகுமார திஸாநாயக்க
இதனால் இலங்கையில் இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்படுமென்பதை அனைவரும் நம்ப வேண்டும். இலங்கையில் தேர்தல் வரலாற்றில் பல பிரிவினைகள் காணப்பட்டன.
இது மக்களை ஏமாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட போலி பிரிவினை. மக்கள் மத்தியில் கட்சி பிரிவினையை ஏற்படுத்தி அரசியல்வாதிகள் ஆட்சி செய்கிறார்கள்.
ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சக்கள் உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் இரண்டு முகங்களுடன் செயல்படுகின்றனர். ஊழல்வாதிகள் நல்லவர்கள் போன்ற முகத்துடன் மக்களை ஏமாற்றுகின்றார்கள்.
பாரிய மாற்றம்
இந்த நிலையில், இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களில் மக்களால் பாரிய மாற்றமொன்றை கொண்டு வர முடியும். புலம்பெயர் மக்களாகிய உங்களுக்கும் இதற்கான அதிகாரம் உண்டு.
உங்கள் வாக்குகள் நாட்டின் ஆட்சியையே நிர்ணயிக்கும். மேலும், புலம்பெயர் இலங்கையர்களால் எமது கட்சிக்கு வழங்கப்படும் ஆதரவு குறித்து எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், ஓய்வுபெற்ற முப்படையினர் அரசியல் கட்சிகளில் இணைவது தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் இலங்கையர்களின் பலம் என்ன என்பதை சிறிலங்கா அரசாங்கம் அறிந்துள்ளது.
சில புலம்பெயர் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாதிருக்கலாம். எனினும், உங்களது எழுச்சியின் மூலம் மாற்றத்துக்கு வழிவகுக்க முடியும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |