நெருங்கும் அதிபர் தேர்தல்: புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ள அனுர
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (20) மாலை கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதன் போது, கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களையும், கனடாவாழ் இலங்கையர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கடந்த மாதம் 5 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, இந்தியாவின் முக்கிய தரப்பினரை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்திருந்தார்.
கனடா விஜயம்
இந்த நிலையில், இன்று அனுரகுமார திஸாநாயக்க கனடாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் கனேடிய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதானமான இரு மக்கள் சந்திப்புக்களின் முதலாவது சந்திப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கனடாவின் றொரண்டோ நகரிலும், இரண்டாவது சந்திப்பு 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வான்கூவர் நகரிலும் இடம்பெறவுள்ளது.
இந்த பயணத்தின் போது இந்தப் பிரதான மக்கள் சந்திப்புகளுக்கு மேலதிகமாக கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களுடன் சகோதரத்துவ சந்திப்புகளிலும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |