பலாலி கிழக்கு உள்ளிட்ட தனியார் காணிகளை விடுவிக்க அநுர உத்தரவு
வடக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் பிமல் ரத்ணாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி பாதுகாப்புத் தரப்பினருக்கு காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி உத்தரவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், ''வசாவிளான் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளில், இதுவரை உரிமையாளர்கள் விவசாயம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மீள்குடியேற அனுமதி
தற்போது அந்தக் காணிகளை முழுமையாக விடுவித்து, உரிமையாளர்கள் வீடுகளை அமைத்து மீள்குடியேற அனுமதிக்கப்படவுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி கிழக்கு பகுதிகளில் உள்ள காணிகளும் விடுவிக்கப்படவுள்ளது.
மேலும், வடக்கின் பல பகுதிகளில் முப்படையினரின் வசமுள்ள சிறிய அளவிலான தனியார் காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன்படி யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் விமானப்படைக்கு உண்மையில் தேவைப்படும் காணிகள் மட்டும் சுவீகரிக்கப்படும்.
அவற்றின் உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .
சில காணிகளை பாதுகாப்பு அல்லது வேறு காரணங்களால் விடுவிக்க முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை ஆராய்ந்து தீர்வு அல்லது இழப்பீடு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |