இஸ்ரேலின் முகவராக மாறிய அநுர அரசு : கடுமையாக சாடும் எதிர்க்கட்சி எம்.பி
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பலஸ்தீனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி தற்போது இஸ்ரேலின் (Israel) முகவராக மாறியிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள (Colombo) ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (16.04.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “பலஸ்தீனுக்கு ஆதரவாக ஸ்டிக்கர் ஒட்டியமை தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட இளைஞர் எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளுடனும் தொடர்பற்றவர் என்று ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
ஆனால் அதற்கு முரணான கருத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடுகின்றார். எனினும் அந்த இளைஞன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜனாதிபதி கையெழுத்திட்ட பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனுக்கு பயங்கரவாத செயற்பாடுகளுடன் எந்த தொடர்பும் இல்லை எனில் எதற்காக வாராந்தம் குற்றத்தடுப்பு பிரிவில் கையெழுத்திடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பலஸ்தீனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அது தொடர்பில் மௌனம் காக்கிறது.
இஸ்ரேலியர்கள்
அக்கறைப்பற்று போன்ற பிரதேசங்களில் வீசா இன்றி இஸ்ரேலியர்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்து இந்த அரசாங்கத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதியின் கூற்றுப்படி பலஸ்தீனுக்கு ஆதரவாக செயற்படுவது மாத்திரமே தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
6 மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் ஜனாதிபதியின் மாற்றங்கள் ஆச்சரியமளிக்கின்றன. பலஸ்தீன் என்ற பெயரைக் கூட உச்சரிக்க மறுக்குமளவுக்கு ஜனாதிபதி மாறியிருக்கின்றார்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
