உலக நாடுகளிடம் தாய்நாட்டைக் காட்டிக் கொடுத்த அநுர : சுதந்திரக்கட்சி குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அமெரிக்கா சென்று உலக நாடுகளுக்கு மத்தியில் தாய்நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake) தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெருமையைக் கூறி சந்தை வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதை விடுத்து, உள்ளக விவகாரங்களை சர்வதேசத்துக்கு வெளிப்படையாகக் காண்பித்து இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு – டாலி வீதியிலுள்ள சுதந்திர கட்சி தலைமயகத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலையில் நிவாரணம்
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஆட்சி காலங்களில் எரிபொருட்களுக்கு எதற்காக இவ்வாறு வரி அறவிடப்படுகிறது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அனைவரும் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இன்று இவர்களால் எரிபொருள் விலையில் என்ன நிவாரணம் வழங்கப்படுகிறது? ஜனாதிபதி அநுர ஜப்பான் சென்று அங்குள்ள இலங்கை பிரஜைகள் மத்தியில் உரையாற்றிய போது, இவ்வாண்டு வரவு – செலவு திட்டத்தில் வரி அதிகரிக்கப்பட மாட்டாது எனக் கூறினார்.
அதற்கு அவர்கள் கரகோஷமெழுப்பினர். அவர்கள் ஜப்பான் பொருளாதாரத்துடன் செழிப்பாகவே வாழ்கின்றனர். ஆனால் அதனால் இலங்கை வாழ் மக்களுக்கு என்ன பயன்?
ஆட்சிக்கு வர முன்னர் ஏற்கனவே அறவிடப்பட்ட வரிகளை குறைப்பதாகக் கூறினர். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? மக்களுக்கு இது சிறந்த பாடமாகும். இது இவ்வாறு நடக்கும் என்பதை நாம் ஆரம்பத்திலேயே கூறினோம். மக்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம்
உணவுப் பொருட்கள், மருந்துகள், கல்வி சார் உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கான வரி முற்றாக நீக்கப்படும் எனக் கூறினர். ஆனால் குறைந்தபட்சம் அவற்றுக்கான வரிகளைக் குறைப்பதற்கு கூட இந்த அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை.
அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதிக்கு, உலகிலுள்ள சகல நாடுகளுக்கு மத்தியில் இலங்கையில் சந்தை வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்கு சிறந்த சந்தர்ப்பம் காணப்பட்டது. ஆனால் அவர் அதற்கு பதிலாக நாட்டின் உள்ளக பிரச்சினைகளை அங்கு கூறி, தாய்நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளனர்.
இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஜனாதிபதி அநுர அமெரிக்கா சென்று நாட்டின் மீது சகல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவிட்டு வந்திருக்கின்றார்.
அநுரகுமார இன்றும் தனக்கான 3 சதவீதத்தைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவனமாகவுள்ளார். 65 இலட்சம் வாக்காளர்களை அவர் மறந்துவிட்டார்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
