வன்னியில் மக்களுக்காக விடுவிக்கப்படவுள்ள காணிகள்: அரசாங்கத்தின் அறிவிப்பு!
வன்னி மாவட்டத்திலே (வவுனியா,முல்லைத்தீவு) 101,762.75 ஏக்கர் நிலங்களை மக்களுக்காக விடுவிக்கவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.
வவுனியா மதுரா நகர் பகுதியிலே தாவரவியல் பூங்கா மற்றும் வன்னி விளாங்குளம் பகுதியில் எக்கோ பூங்கா என்பவற்றை அமைப்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்களங்களுடன் வவுனியா மாவட்ட செயலக கூட்டம் சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
காணி பிரச்சினை
மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த கால அரசாங்கங்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலமாக வடக்கு கிழக்கு பகுதிகளிலே அளவீடுகளை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறு அளவீடு மேற்கொள்ளும் போது மீள்குடியேறிய மக்களின் வாழ்விடங்கள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச நிலங்கள் என்பனவும் வன பிரதேசங்களிற்கு உள்வாங்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கே பாரிய ஒரு காணி பிரச்சினை காணப்பட்டது.
நாம் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையிலே இதற்கான உரிய தீர்மானங்களை மேற்கொண்டு வன்னி நிலப்பரப்பிலே 101,762.75 நிலங்களை மக்களுக்காக விடுவிக்கவுள்ளோம்.
அபிவிருத்தி திட்டங்கள்
அதிலே வவுனியா மாவட்டத்திற்கு 22,804.40 ஏக்கர் நிலமும் மன்னார் மாவட்டத்தில் 178,82.8 ஏக்கர் நிலமும் முல்லைத்தீவு மாவட்டத்திலே 48,532.6 ஏக்கர் நிலங்களையும் விடுவிக்கப்படவுள்ளது.
எங்களுடைய அரசாங்கத்தை பொறுத்த வரையிலே பிரதான பிரச்சினையாக காணப்படுகின்ற இந்த காணி விடுவிப்பு, அதாவது வனவளதிணைக்களத்தினால் கையப்படுத்தப்பட்ட காணிகளை நிச்சயமாக மக்களுக்காக விடுவிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
மேலும், பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்தி நாங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
