சுரேஷ் சலேயின் மனு தொடர்பான இடையீட்டு மனுக்கள் : நீதிமன்றத்தின் உத்தரவு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள நீதிப் பேராணை மனு தொடர்பான இடையீட்டு மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (10) திங்கட்கிழமை குறித்த மனுக்கள் மீதான விசாரணை இடம்பெற்றது.
இதன்போது இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தமது விடயங்களை முன்வைத்தனர்.
நீதிமன்ற உத்தரவு
அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்க வேண்டும் எனக் கோரி, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த இடையீட்டு மனு மற்றும் ஒரு சில தரப்பினரால் சலேவுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு ஆகியன இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |