வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லவிருப்போருக்கு வெளியான அறிவிப்பு
இஸ்ரேலில் (Israel) வேலை வாய்ப்புக்கான தொழிற்திறன் பரீட்சையில் (Skill Test) சித்தியடையாதவர்களுக்கு மீண்டும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடையாது என இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பரீட்சையில் சித்தியடையாதவர்கள் 6 மாதங்களின் பின்னர் மீண்டும் பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல் என பணியகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய அபிவிருத்தி துறையில் வேலைகளுக்கான நிகழ்நிலை பதிவு (Online registration) இந்த நாட்களில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இஸ்ரேலின் அறிவிப்பு
அதன்படி, நிகழ்நிலை பதிவுக்குப் பிறகு, நேர்காணலுக்குத் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான திகதி மற்றும் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட வேண்டிய பணியக மையத்தின் பெயர் ஆகியவை சம்பந்தப்பட்ட வேலை தேடுபவரின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில், திறன் பரீட்சையில் சித்தியடையாத நபர்கள் இஸ்ரேல் அரசாங்கத்தின் அறிவிப்பின் படி மட்டுமே மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும், இஸ்ரேலால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வேண்டுகோள்
இதேவேளை, குறித்த வேலைகளுக்கு 15 நாடுகளில் இருந்து தொழிலாளர்களை இஸ்ரேல் அரசு ஆட்சேர்ப்பு செய்து வருகிறது, இந்த முடிவு அந்த 15 நாடுகளுக்கும் செல்லுபடியாகும் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
எனவே, பொய்யான அறிக்கைகளுக்கு ஏமாற வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |