நுண்நிதி சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையில் நுண்நிதித் தொழிற்றுறைக்கு விரிவான ஒழுங்குபடுத்தல் சட்டகமொன்றை உருவாக்குவதற்காக 2016 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நுண்நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகள் போதுமானமாக இன்மையால், புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக, இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் அரச வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர், குறித்த சட்டமூலத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர்களால் உயர்நீதிமன்றில் 07 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனை
குறித்த மனுக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் 'பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களை சீர்செய்வதற்கான துறைசார் மேற்பார்வை செயற்குழுவால்' வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களைக் கருத்தில் கொண்டு, புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும், மத்திய வங்கியும் கவனம் செலுத்தியுள்ளன.
அதற்கமைய, புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக 2025.08.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
