தந்தையை நினைவுகூரி நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்கிய அர்ச்சுனா!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது தந்தையை நினைவுகூரி இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது மனந்திறந்து உரையாற்றி கண்ணீர் விட்டுள்ளார்.
இன்று (22.11.2025) நடைபெற்று வரும் வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதத்தின் போது அவர் உரையாற்றினார்.
சுகாதார அமைச்சு தொடர்பில் தனது உரையை நிகழ்த்தி வந்த அவர் உரையின் இடையே கண்ணீர் விட்டு அழுதார்.
தந்தையின் இழப்பு
இதன்போது உரையாற்றிய அர்ச்சுனா எம்.பி,
“யுத்த காலத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தை காணாமல் போனார். அவர் 2009 ஆம் ஆண்டு வரையில் விடுதலைப் புலிகளுக்காக பணியாற்றியவர்.
இலங்கை முழுவதும் தனது தந்தையை தேடி அலைந்து விட்டேன். அவர் உயிரோடு இருந்தால் எனக்கு மகிழ்ச்சி.
எனது தந்தை உங்களுக்கு புலியாக தெரிந்தாலும் அவர் எனக்கு தந்தை தானே. எனது தந்தை எங்கே என நான் தெரிந்துக் கொள்ள வேண்டும். எனது தந்தையினால் தான் நான் இன்று இவ்வாறு சிங்களம் பேசுகிறேன். எனது தந்தை நன்றாக சிங்களம் பேச தெரிந்தவர். அவர் சிங்கள மக்களை மிகவும் நேசித்த ஒருவர். எனக்குள் மிக பெரிய வேதனை உள்ளது.
மன்னார் வைத்தியசாலையில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக நான் முன்நின்றேன். அதற்காக என்னை சிறையில் அடைத்தனர். அவ்வாறான விடயங்களால் ஏற்பட்ட தாக்கம் காரணமாகவே, நான் அரசாங்கத்தை எதிர்த்து போட்டியிட்டேன். நான் இந்த நாடாளுமன்றத்தில் இருந்து சென்று விடுவேன். இந்த நாட்டில் இருக்கக் கூட விரும்பவில்லை.
நான் வீிதி விதிமுறையை மீறியதாக என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கின்றீர்கள். திருகோணமலையில் பௌத்த பிக்கு ஒருவர் காவல்துறையினரை கன்னத்தில் அறைந்துள்ளார். அது தொடர்பில் இது வரையில் எதுவித சட்ட நடவடிக்கையும் நீங்கள் மேற்கொள்ளவில்லை.” என கேள்வியெழுப்பியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |