ஏ-9 வீதியில் கஞ்சா கடத்திய சிறிலங்கா இராணுவ , கடற்படை சிப்பாய்கள் கைது
கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின் வீதித் தடுப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 50 இலட்சத்திற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இராணுவ சிப்பாய் மற்றும் கடற்படை சிப்பாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக புனேவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
இராணுவத்தின் சம்பூர் பகுதியிலுள்ள முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவரும் யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள கடற்படை முகாமில் பணிபுரியும் சிப்பாய் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட மற்றையவர் சாவகச்சேரி நுணாவிலில் வசிக்கும் 34 வயதுடையவராவார்.
50 இலட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு
இராணுவம் மற்றும் கடற்படை வீரர்களிடம் இருந்து மூன்று கிலோ கேரள கஞ்சாவும் மற்றைய சந்தேக நபரிடம் இருந்து நான்கு கிலோ கேரளா கஞ்சாவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரிகள் குழு சோதனை
மூத்த காவல் கண்காணிப்பாளர் எம். மங்கள சமன் குமார விக்கிரமநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், புனேவ காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் ரஞ்சித் பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனைகளை மேற்கொண்டது.
