இராணுவ அதிகாரிக்கு போதைப்பொருள் மாபியாக்களுடன் தொடர்பு : படைகளின் தகவலாளி பகிரங்க குற்றச்சாட்டு
ஏறாவூர் பிரதேசத்தில் இராணுவ மேஜர் அனஸ் என்பவர் தலைமையில் போதைப்பொருள் ஒழிக்கும் குழு என்ற பெயரில் போதைப்பொருள் மாபியாக்களுடன் இயங்கி வரும் குழு அப்பாவி இளைஞர்களுக்கு போதைப் பொருளை வைத்து கைது செய்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என பாதுகாப்பு படைகளுக்கு நீண்ட காலமாக இரகசிய தகவல் வழங்கி வரும் ஏறாவூரைச் சேர்ந்த செய்யது முகமது பளீல் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் இன்று வியாழக்கிழமை (1) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
போதைப்பொருள் மாபியாக்களுடன் தொடர்பு
நான் நீண்டகாலமாக இராணுவம், காவல்துறை, விசேட அதிரடிப்படை மற்றும் பாதுகாப்பு படையினருக்கு போதை பொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பான இரகசிய தகவல்களை வழங்கி வருகிறேன்.

ஏறாவூர் பிரதேசத்தில் இராணுவ மேஜர் அனஸ் என்பவர் தலைமையில் போதைப்பொருளை ஒழிக்கும் குழு என்ற பெயரில் ஒரு குழுவை இயக்கி வருகின்றார் இதில் அதிகமானோர் போதைப்பொருள் பாவனையாளர்கள். இவர்களில் பலர் போதைப் பொருள் மாபியாக்களுடன் சேர்ந்து போதைப் பொருளை அப்பாவி இளைஞர்களிடம் வைத்து அவர்களை கைது செய்ய வைத்து வருகின்றனர்.
இவ்வாறு மேஜர் அனஸ் குழுவின் செயல்பாடு தொடர்பாக நான்; தகவல்களை வழங்கி வருவதால் அனஸ் குழுவினர் என்னை பாதுகாப்பு படைகளுக்கு இரகசிய தகவல்களை வழங்க கூடாது, இராணுவ மேஜர் தான் இங்கு போதைப் பொருள் தொடர்பாக தகவல்களை வழங்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளதாக அந்த குழுவினர்கள் என் மீது அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் தலை கவசத்தால் தாக்குதல்
இவ்வாறான நிலையில் அண்மையில் அவருடைய குழுவுடன் இராணுவ மேஜர் அனஸ் அப்பாவி இளைஞர் ஒருவரை போதைப் பொருள் வைத்து பிடிப்பதற்காக வந்த போது அதனை தடுக்க முற்பட்ட என் மீது மோட்டார் சைக்கிள் தலை கவசத்தால் தாக்கினார்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் மின்னேரியா இராணுவ முகாமிற்கு முறைப்பாடு செய்துள்ளேன் இருந்தபோதும் என்னை தாக்கிய மேஜர் மீது காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதேவேளை இன்று வரை காவல் நிலையத்தில் நீதிமன்றத்தில் எந்தவிதமான முறைப்பாடும் இல்லாத என்னை ஐஸ் போதைப் பொருள் அல்லது குண்டுகள், அல்லது துப்பாக்கி வைத்து கைது செய்வேன் என இராணுவ மேஜர் அனஸ் தலைமையில் இயங்கி வரும் குழுவினர் என்னை மிரட்டி வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இராணுவ முகாமில் இருந்து தான் போதைப் பொருள் வருவதாக அண்மையில் ஊடகங்கள் ஊடாக தெரிவித்தார்.
எனவே இராணுவ மேஜர் அனஸ் அவ்வாறு செயற்படுகின்றாரா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது காரணம் கொழும்பில் கடமையாற்றி வரும் இவர் அடிக்கடி விடுமுறையில் வீட்டிற்கு வரும் போது தான் இங்கு இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது எனவே உரிய அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |