மன்னாரில் சிறிலங்கா இராணுவ சிப்பாய்க்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை
மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன்,ஒருவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்டு மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைகளின் இடம் பெற்று வந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய்க்கு 14 வருடங்களின் பின்னர் மன்னார் மேல் நீதிமன்றம் இன்று (6) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் 02-ஒக்டோபர்-2009 (02/10/2009) அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இராணுவ சேவையில் இருந்த போது இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு ஒருவர் படுகாயமடைந்தார்.
மன்னார் மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை
இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து மன்னார் மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்தது.
முருங்கன் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தீர்ப்புக்காக இன்றைய தினம் (6) மன்னார் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.எம்.மிகால் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
மரண தண்டனை
இதன் போது இரண்டு மனிதப் படுகொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்ட நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதியால் குறித்த இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இன்றைய தினம் குற்றவாளியை போகம்பரை சிறைச்சாலைக்கு அனுப்பும்படி கட்டளையிடப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |