சட்டவிரோதமாக 30 இற்கும் அதிகமான ஆடுகளைக் கொண்டு சென்ற இருவர் கைது! (படங்கள்)
உரிய அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட முப்பதிற்கும் அதிகமான வளர்ப்பு ஆடுகளை கல்முனை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை பகுதியிலுள்ள காவல்துறை சோதனைக் காவலரணில் குறித்த ஆடுகளை கொண்டு வந்த லொறி உட்பட இருவர் இன்று(4) மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டம் தோப்பூர் பகுதியிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி கொண்டுவரப்பட்ட சுமார் முப்பதிற்கும் அதிகமான ஆடுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமாக வழித்தடை அனுமதிப்பத்திரமின்றி கால்நடைகளை லொறி ஒன்றில் அடைத்து சென்ற நிலையில் மீட்கப்பட்ட ஆடுகள் தொடர்பிலான நடவடிக்கையினை கல்முனை பிராந்திய உதவிக் காவல்துறை அத்தியட்சகர் ரி.எச்.எம். லசந்த புத்திகவின் நெறிப்படுத்தலில் கல்முனை தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் துரிதமாக செயற்பட்ட காவல்துறை சார்ஜன்ட் சிசிரகுமார, றஹீம் காவல்துறை உத்தியோகத்தர்களான சேனநாயக்க சாரதி வசந்த உள்ளிட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் குறித்த ஆடுகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற 47 வயது மற்றும் 59 வயதுடைய இரு சந்தேக நபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிறுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



