அகழ்வாராய்ச்சிக்குச் செங்கல்லும் கலவையுமா? பிரதியமைச்சர் அருண் என்ன சொல்கிறார் ?
வழமைபோல கண்டபாட்டுக்கு அடிச்சிவிடும் அரசியலும், நீதிமன்றத்தை மிதித்த அடிக்கல்லும் ஒரு செய்தியை சொல்கிறது
“இங்கு புதிய கட்டுமானங்கள் எதுவும் இடம்பெறாது, அகழ்வுப் பணி மாத்திரமே இடம்பெறும்” - முகநூலில் அறிக்கை விட்டுத் திருகோணமலையாரை அடக்கிவைக்கப் பார்க்கிறாரா பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா?
இன்று காலையிலேயே புத்த பிக்குகள் சகிதமாக, செங்கற்களையும் சிமெந்து கலவையையும் வைத்துப் பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது பிரதி அமைச்சரே ஒரு கேள்வி உலகத்தில் எந்த ஊரிலாவது அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் பூமிக்குக் கீழே தோண்டி, செங்கற்களை அடுக்கி அடிக்கல் நாட்டுவார்களா?
இது மக்களை முட்டாளாக்கும் அப்பட்டமான பொய்யா இல்லை உங்கள் JVP பாணி அடிச்சிவிடும் அரசியலா?
சமத்துவம் பேசும் தோழர்களே உங்கள் சட்டம், நீதி எல்லாம் சாமான்யர்களுக்கு மட்டும்தானா?
கன்னியாவில் கட்டுமானங்களை மேற்கொள்ளத் தடை விதித்து நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் போது, அதை வெளிப்படையாக மீறி அடிக்கல் நாட்டியது குற்றமில்லையா?
பசிக்குத் தேங்காய் களவெடுத்த சிறுமிக்கு உடனடி சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கும் இந்த நாட்டில், நீதிமன்றத் தீர்ப்பையே காலின்கீழ் போட்டு மிதித்து, மக்களின் பாரம்பரிய நிலத்தைக் களவாட அடிக்கல் நாட்டியவர்களையும், அதற்கு உடந்தையாக இருந்த பிக்குகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி கைது செய்ய இந்த அரசுக்குத் திராணி இருக்கிறதா?
தவிசாளர் பற்றியும், புஞ்சி நிலமே பற்றியும் பேசும் பிரதி அமைச்சரே அவர்கள் செய்தது தவறு என்றால், இப்போது உங்கள் ஆட்சியில் நடப்பதற்கு யார் பொறுப்பு?
அன்றைய பழைய கதைகளைப் பேசி இப்போது நடக்கும் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தப் பார்க்கிறீர்களா?
இப்படித்தான் முத்து நகர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்க, மக்கள் இன்று வீதியில் நிற்கிறார்கள்.
அதே கதைதானா கன்னியாவுக்கும்? திருகோணமலை கடற்கரை புத்தர் சிலை விவகாரத்தில் என்ன நடந்ததோ, அதே நாடகம்தானே இங்கும் அரங்கேறுகிறது?
நீதிமன்றத் தீர்ப்புகளை உங்கள் சுயநல அரசியல் தேவைகளுக்காகவும், பேரினவாத ஆக்கிரமிப்புகளுக்காகவும் மீறலாம் என்றால். நீதிமன்றங்கள் எதற்கு?
ஏழை எளிய சாமான்யர்களை மட்டும் ஒடுக்கி வைக்கத்தானா?
நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி இன்று நாட்டப்பட்ட அந்த அடிக்கல்... இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி்செத்துவிட்டது என்பதற்கும், மாற்றம் என்று வந்தவர்களின் நிலைபாட்டையும் மிகச் சிறந்த உதாரணம் பிரதி அமைச்சரே
இப்படி ஒரு ஆட்சியில், யாருக்காக, எதற்காக இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் பதிலை எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் தன்னார்வளர்கள்.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 6 மணி நேரம் முன்