நீதிமன்றில் விமல் வீரவன்ச முன்னிலை! பிடியாணையைத் திரும்பப் பெற நீதவான் மறுப்பு
🛑 புதிய இணைப்பு
பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சற்று நேரத்திற்கு முன்னர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வாகனம் பழுதடைந்த காரணத்தினாலேயே தனது வாடிக்கையாளரால் குறிப்பிட்ட நேரத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாமல் போனதாக விமல் வீரவன்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மஞ்சுள பத்திராஜ நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
வாகனம் பழுதடைந்ததால் ஏற்பட்ட தாமதத்தை விளக்கிய சட்டத்தரணி மஞ்சுள பத்திராஜ, தனது வாடிக்கையாளருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட கைது பிடியாணையைத் திரும்பப் பெறுமாறு (Recall the warrant) நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இருப்பினும், இந்தக் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொள்ள மறுத்த கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம (Asanga S. Bodaragama), இது தொடர்பில் நாளை (22-09-2026) முறையான மோஷன் (Motion) மனுவொன்றின் ஊடாகக் கோரிக்கை விடுக்குமாறு பிரதிவாதி தரப்புக்கு அறிவுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
🛑 முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாரு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (21-09-2026) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம (Asanga S. Bodaragama) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமைகள்
மேலும் தெரியவருகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அன்றைய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் சைத் ராத் அல் ஹுசைனின் (Prince Zeid Ra’ad Al Hussein) இலங்கை விஜயத்தின் போது, கொழும்பு தும்முல்ல பகுதியில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளை மறித்துப் போக்குவரத்துப் பாதிப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு இன்று (21-09-2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இதையடுத்து, அவரைக் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாரு தலைமை நீதவான் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |