பல இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய வர்த்தகர்
இலங்கைக்கு (Sri Lanka) சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 21 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (15) கைது செய்யப்பட்ட குறித்த நபர் கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய வர்த்தகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நேற்று (14) இரவு 10.15 மணியளவில் இந்தியாவிலிருந்து (India) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
21,000 வெளிநாட்டு சிகரெட்டுகள்
பின்னர் விமான நிலையத்தின் அனைத்து சோதனை நடவடிக்கைகளையும் முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்படும் போது காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் சந்தேக நபர் கொண்டுவந்த பயணப்பொதியிலிருந்து 21 இலட்சம் ரூபா பெறுமதியான 21,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 105 சிகரெட்டு கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் தற்போது காவல்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி நீர்கொழும்பு (Negombo) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |