யாழில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் நால்வர் கைது
யாழ்ப்பாணக் களப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளைப் பிடித்த நான்கு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று இரவு (15.09.2026) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணக் களப்பின் மணியந்தோட்டம் பகுதியில் கல்முனை கடற்படைப் பிரிவினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கை
இதனை தொடர்ந்து அப்பகுதியில் பயணித்த இரண்டு சந்தேகத்திற்கிடமான படகுகளை கடற்படையினர் சோதனையிட்டபோது, சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்ட 9,000 கடல் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, குறித்த படகுகளில் இருந்த நான்கு சந்தேக நபர்களும் இரு படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டடுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34 முதல் 44 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் கற்பிட்டி, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட 9,000 கடல் அட்டைகள், இரு படகுகள் மற்றும் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |