தற்கொலை குண்டுதாரியாக மாறப்போகின்றாரா அஸாத் சாலி?
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்காவிட்டால் விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படுமென அஸாத் சாலி தெரிவித்திருக்கிறார்.
அப்படியாயின் குண்டுதாரியாக மாறப்போகின்றாரா அஸாத் சாலி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று (06) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறியதாவது, ஒட்டுமொத்த உலக நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் வைரஸ் தொற்றினால் உயிரிழப்போர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயினும் அவர்களது சடலங்களைத் தகனம் செய்ய வேண்டுமென்ற தீர்மானம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களுக்கு மாத்திரமே தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட்டதுடன் ஏனைய நோய்களால் உயிரிழப்போரின் சடலங்களுக்கு அவர்களது மதமுறைப்படி இறுதிச்சடங்குகளை நடத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.