பாகிஸ்தான் படைத்துறைத் தலைவரின் இலங்கை விஜயத்தால் வெடித்த சர்ச்சை!
பாகிஸ்தான் படைத்துறைத் தலைவர் அசிம் முனீர், ஜூலை 20 முதல் 23 வரை இலங்கைக்கு மேற்கொள்ள உள்ள அதிகாரப்பூர்வ பயணம், பாகிஸ்தானில் பல தரப்புகளில் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
பொருளாதார வீழ்ச்சியில் திணறும் பாகிஸ்தான், தற்போது கடனில் மூழ்கி, அத்தியாவசிய பொருட்களுக்கே மக்களை வரிசையில் நிற்க வைத்திருக்கிறது.
நாட்டு மக்களால் பாடசாலை கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில், நாட்டின் தலைமை அதிகாரி சொகுசு விமானம், உலங்குவானூர்தி, ஐந்துநட்சத்திர விடுதி என விலையுயர்ந்த பயண திட்டத்துடன் வெளிநாடு செல்கிறார் என்பதே மக்கள் கோபத்தின் முக்கியக் காரணமாக மாறியுள்ளது.
உலங்குவானூர்தி பயணம்
அசிம் முனீர் இந்த பயணத்தில், சீகிரியா, சிவனொலிபாதமலை போன்ற இடங்களை உலங்குவானூர்தியில் சுற்றி பார்க்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது "பொதுமக்களின் வரிவிதிப்பில் கட்டிய பணத்தால் செய்யப்படும் சுற்றுலா என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கம், தற்போதைய நெருக்கடியை சமாளிக்க அமைச்சர்களுக்கே வெளிநாட்டு பயணங்களை தடை செய்துள்ள நிலையில், படைத்துறைத் தலைவர் மட்டும் இந்த விதிகளை மீறிச் செல்கிறார் என்பது மிகுந்த எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்பின்றி செயல்படுகிறார்கள் என்பதற்கான இன்னொரு சான்றாக இது பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரப் போர்
மேலும், பாகிஸ்தானின் அரசியல் மற்றும் படைத்துறை இடையே நிலவும் விரிசல்கள் மற்றும் அதிகாரப் போரில், இந்தப் பயணம் ஒரு "அதிகார அச்சுறுத்தல்" என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மக்கள் எதிர்பார்ப்பது பொறுப்பான, மக்களுடன் நின்று அவர்களின் துன்பங்களை பகிர்ந்து கொள்கிற ஒரு தலைவர். ஆனால், அசிம் முனீரின் இலங்கை பயணம், பாகிஸ்தானில் தற்போதுள்ள நம்பிக்கையையும் பொறுப்பையும் மேலும் பாதித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், இது ஒரு உத்தியோகபூர்வ விஜயம் அல்லவென்றும் இது ஒரு சுயநல அடிப்படையிலான சொகுசு பயணம்தான் என பலர் ஒருமித்த கருத்து தெரிவித்து வருகின்றனர்.
[
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
