உக்ரைன் அதிபரை கொலை செய்யும் ரஷ்ய திட்டம் முறியடிப்பு- பிடிபட்டது கொலைக்குழு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் ரஷ்ய சிறப்பு ஏஜென்சியின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை கீவ் போஸ்ட் என்ற உக்ரைன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து கீவ் போஸ்ட் செய்தி நிறுவன டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“ ரஷ்யாவின் சிறப்பு ஏஜென்சி தலைமையிலான 25 பேர் அடங்கிய இராணுவ குழு ஸ்லோவாகியா- ஹங்கேரி எல்லையில் உக்ரைன் அதிகாரிகளால் பிடிபட்டுள்ளது. இந்தக் குழுவின் பிரதான நோக்கம் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதே” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்தே, ரஷ்யாவின் முதல் இலக்காக நான் தான் இருக்கிறேன் என்று ஜெலன்ஸ்கி கூறி வருகிறார்.
மேலும், ரஷ்யாவின் நாசகார படைகள் கீவ் நகரில் நுழைந்து இருப்பதாகவும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் அப்படைகள் தேடி வருவதாகவும் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு விடுத்த எச்சரிக்கையின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.