தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டு பயணி: தீயாய் பரவும் காணொளி
சமூக ஊடகங்களில் பரவி வரும் இலங்கையர் ஒருவர் வெளிநாட்டவரைத் தாக்குவது தொடர்பான காணொளி குறித்து சிறிலங்கா காவல்துறை விளக்கமளித்துள்ளது.
காவல்துறை அறிக்கையின் படி, குறித்த தாக்குதல் சம்பவமானது, வெலிகம பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணி, வெலிகம - பெலேனா கடற்கரையில் உள்ள ஒரு சர்ஃபிங் பயிற்சி நிலையத்தின் ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறி காவல்துறையில் முறைப்பாடும் அளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விரிவான நடவடிக்கை
அதனைதொடர்ந்து, 24 வயதான சந்தேக நபர் அதே நாளில் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தபட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பான வழக்கு இந்த ஆண்டு (2025) செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் விசாரிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் முறைப்பாடுகள் குறித்து விரிவான நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
சட்ட நடவடிக்கை
இருப்பினும், சில தனிநபர்கள் மற்றும் குழுக்கள் பழைய சம்பவங்களை புதியவை போல பரப்பி, பொதுமக்களை தவறாக வழிநடத்தி, நாட்டின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாக காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், தவறான அபிப்ராயங்களை உருவாக்க அல்லது இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டுமென்றே காலாவதியான உள்ளடக்கத்தைப் பகிர்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
