'டுபாய் தனுஷ்க' வின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய உதவியாளர் கைது
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரும், முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘டுபாய் தனுஷ்க’ என்பவரின் இலங்கையிலுள்ள போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தும் ‘சுபா’ என்ற பெண்ணின் முக்கிய உதவியாளர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 30 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (02.11.2026) பிற்பகல் வெல்லம்பிட்டிய காவல் பிரிவுக்குட்பட்ட பன்சல்ஹேன வீதியிலுள்ள வீடொன்றுக்கு முன்னால் இந்தத் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘சுபா’
இதன்போது கைது செய்யப்பட்டவர், வெல்லம்பிட்டிய - பன்சல்ஹேன வீதிப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின்போது, டுபாயில் இருக்கும் ‘டுபாய் தனுஷ்க’ இலங்கைக்கு இரகசியமாக அனுப்பும் போதைப்பொருட்களை நாட்டில் விநியோகிக்கும் நடவடிக்கைகளை டுபாயிலிருந்தே ‘சுபா’ என்ற பெண் வழிநடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த பெண்ணுக்குச் சொந்தமான போதைப்பொருள் கையிருப்புகளை மறைத்து வைப்பதிலும், அவற்றை விநியோகிப்பதிலும் கைது செய்யப்பட்ட நபர் முக்கிய முகவராகச் செயற்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |