முடிவெடுக்க முடியாத நிலையில் அமைச்சுக்கள்! அத்துரலிய ரத்ன தேரர் சீற்றம்
அமைச்சுக்கள் எவருக்கும் எந்த தீர்மானங்களையும் எடுக்க முடியாத வகையில் பிரிக்கப்பட்டுள்ளதால், அவற்றை முதலில் ஒழுங்குப்படுத்தி விஞ்ஞான ரீதியில் பிரிக்க வேண்டியது காலத்தின் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் (Athuraliye Rathana thero) தெரிவித்துள்ளார்.
இது அரசாங்கத்தின் பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மின் சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
கமத்தொழில் அமைச்சு ஓரிடத்தில், பெருந்தோட்டத்துறை அமைச்சு வேறோரிடத்தில். மகாவலி அமைச்சு இன்னுமோர் இடத்தில். பசளை வேறிடத்தில். அமைச்சர் மேலும் ஒரு இடத்தில். கடந்த அரசாங்கமும் இப்படியே அமைச்சுக்களை பகிர்ந்தது.
இப்படி செயற்படும் போது சரியான தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துவது எப்படி என்ற பாரதூரமான பிரச்சினை ஏற்படுகிறது.
அதேவேளை சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பது சம்பந்தமான விடயத்தில் உடனடியாக தீர்வு அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.