மத்திய வங்கி ஆளுநர் மீது தேசிய மக்கள் சக்தி பாய்ச்சல்
தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களை மாற்றினால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ள கருத்தை தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி(sunil handunnetti) கண்டித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் இவ்வாறானதொரு அரசியல் அறிக்கையை வெளியிடுவதற்கு மத்திய வங்கியின் ஆளுநருக்கு உரிமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிதியமைச்சர் பதவிக்கு முன்மொழியப்பட்டவர்களில் ஒருவரான ஹதுன்நெத்தி தேசிய பத்திரிகையொன்றுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநருக்கு உரிமை இல்லை
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் இவ்வாறான அரசியல் அறிக்கையை வெளியிடுவதற்கு மத்திய வங்கி ஆளுநருக்கு உரிமை இல்லை. இதுபோன்ற அறிக்கை தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். அதுதான் முதல் விஷயம்.
மறுபுறம், அபாயகரமான பொருளாதாரத்தில் நாட்டை சிக்க வைத்த ஆட்சியாளர்களிடம் நாட்டை ஒப்படைக்கக் கூடாது என மத்திய வங்கியின் ஆளுநர் கூறுகிறார். நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.அவ்வாறெனில் அதிலிருந்து நாட்டை விடுவிக்கக்கூடிய ஒரு குழுவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும்.
பொருளாதார அபாயத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற ஒரே வழி
அதன்படி, சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து சுட்டிக்காட்டியபடி, ஊழலைத் தடுத்து, நாட்டின் வருமானச் செலவுகளை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தும் தேசிய மக்கள் சக்தியிடம் நாட்டை ஒப்படைப்பதே பொருளாதார அபாயத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற ஒரே வழி.
ஏனென்றால், ஊழலைத் தடுக்க தற்போது சட்டங்கள் உள்ளன, ஆனால் அவை செயல்படுத்தப்படவில்லை. நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு யார் காரணம் என்றும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்த அமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையக் கூடும் என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளதாக நான் கருதுகின்றேன்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |