இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் மீது கடும் தாக்குதல்
இராஜாங்க அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட உதவி செயலாளர் கடந்த 25ஆம் திகதி இரவு பல்பொருள் அங்காடி ஒன்றில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.
பாதிக்கப்பட்டவர் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின்(Vidura Wickremanayake) தனிப்பட்ட உதவியாளர் ஆவார்.
கடந்த 25ஆம் திகதி இரவு அளுத்கம தர்கா நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முககவசம் அணியாத இருவர் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்பொருள் அங்காடி பணிப்பெண்கள் அவர்களை முககவசம் அணியுமாறு அறிவுறுத்தினார்.இதன்போது இருவரும் பணிப்பெண்களை கடுமையாக திட்டி தீர்த்துள்ளனர். அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட செயலாளரும் அங்கிருந்துள்ளார்.அவர் ஊழியர்கள் சார்பாக கதைத்துள்ளார் .
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அந்த அதிகாரியை அணுகி சரமாரியாக தாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் அளுத்கம சீனவத்தை பகுதியை சேர்ந்தவர்கள். சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
