தமிழர் பகுதியில் சுயாதீன ஊடகவியலாளர் மீது தாக்குதல்
முல்லைத்தீவில் (Mullaitivu) சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (05.02.2025) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்-பனிக்கன்குளம், கிழவன்குளம். பதினெட்டாம் போர், கொக்காவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏ_ 9 வீதியின் இரண்டு புறங்களிலும் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
சட்டவிரோத மணல் அகழ்வு
அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள், அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும் சட்டவிரோதமாக ஆற்றிலே உழவு இயந்திரங்களை விட்டு மணல்களை ஏற்றுவதும், மரம் கடத்துகின்ற பல்வேறு குற்ற செயல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக பதினெட்டாம் போர் பகுதியில் நேற்றைய தினம் (15.02.2025) சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் குறித்த விடயங்களை செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.
இதன்போது ஏ9 வீதியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காட்டு பகுதியில் மணல் கொண்டு வந்து குவிக்கப்படுவதை காணொளி பதிவு செய்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் ஊடகவியலாளரின் ஒளிப்பட கருவியை பறிக்க முற்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர் மீது தாக்குதல்
மேலும் ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டதோடு கொலை அச்சுறுத்தல் விடுத்து நிலையில் மாங்குளம் காவல்துறையின் உதவியுடன் அவர் குறித்த இடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த மாங்குளம் காவல்துறையினர் குறித்த காட்டுக்குள் செல்லும் வீதியை ஜேசிபி இயந்திரம் கொண்டு வெட்டி குறித்த காட்டுக்குள் செல்ல முடியாதவாறு செய்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக மாங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



