மீண்டும் உக்ரைன் அதிரடி : ரஷ்ய விமான தளம் மீது தாக்குதல்
உக்ரைன் மீதான தனது தீவிர வான்வழித் தாக்குதலை ரஷ்யாவின் தொடா்ந்துவரும் சூழலில், அந்த நாட்டு விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் விமானப் படை வெளியிட்ட அறிக்கை
இது குறித்து உக்ரைன் விமானப் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை ரஷ்யா 322 ட்ரோன்கள் மற்றும் திசைதிருப்பு சாதனங்களை உக்ரைன் மீது ஏவியது. இதில் 157 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, 135 ட்ரோன்கள் மின்னணு தடுப்பு முறைகளால் செயலிழக்கச் செய்யப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு உக்ரைனின் க்மெல்நிட்ஸ்கி பகுதி இந்தத் தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்தாலும், அங்கு பாதிப்புகள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று பிராந்திய ஆளுநா் சொ்ஹி டைரின் தெரிவித்தாா்.
இந்தத் தாக்குதல், வியாழக்கிழமை இரவு 550 ட்ரோன்கள் மற்றும் 11 ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்கு அடுத்த நாள் நடைபெற்றன. அந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததுடன், 26 போ் காயமடைந்தனா். கீவ், சுமி, காா்கிவ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், சொ்னிகிவ் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டன. கீவில் ரயில்வே உள்கட்டமைப்பு, பள்ளிகள், கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. போலந்து தூதரகமும் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ராடோஸ்லா சிகோா்ஸ்கி தெரிவித்தாா்.
ரஷ்யாவின் விமான தளம்மீது தாக்குதல்
இதற்கிடையே உக்ரைன் இராணுவ உயரதிகாரிகள் மகநூலில் வெளியிட்ட பதிவில், ரஷ்யாவின் போரிசோகிளெப்ஸ்க் விமான தளத்தைத் தாக்கியதாகவும், அங்கு சு-34, சு-35எஸ், சு-30எஸ்எம் போா் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனா். இந்தத் தாக்குதலில் கிளைடு குண்டுகள், பயிற்சி விமானம் மற்றும் “பிற விமானங்கள்” உள்ள கிடங்கு பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இருந்தாலும், இதுகுறித்து ரஷ்ய அதிகாரிகள் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே, ரஷ்யாவின் பல விமான தளங்களில் 40-க்கும் மேற்பட்ட விமானங்களை அழித்ததாக உக்ரைன் கடந்த மாதம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது
தங்கள் நாட்டின் மீது ஏவப்பட்ட உக்ரைனின் 94 ட்ரோன்களை வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை சுட்டு வீழ்த்தியதாகவும், இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
