காவல்துறையில் சரணடைய சென்றவர்கள் மீது சினிமாப் பாணியில் தாக்குதல்!
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காட்டு பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து மன்னார் காவல் நிலையத்தில் சரணடையச் சென்றவர்கள் மீது காவல் நிலைய நுழைவாயிலில் வைத்து டிப்பர் வாகனத்தினால் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிப்பர் வாகனம் மோதியதில் மன்னார் பொலிஸ் நிலைய நுழை வாயிலில் நின்ற 5 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து திட்டமிட்டு இடம்பெற்றுள்ளதாகவும் காவல் நிலையத்திற்கு முன்பாகவே இடம் பெற்றுள்ளமையாலும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அத்துடன் விபத்தை எற்படுத்திய டிப்பருடன் சாரதி தப்பி சென்று நிலையில் சாரதியைத் தேடும் பணி மன்னார் காவ்துறையினரால் இடம் பெற்று வருகின்றது. விபத்து நன்கு திட்டமிடப்பட்ட விபத்து எனவும் விபத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் பண பலத்தை பயன்படுத்தி விபத்துக்கான காரணத்தை திசை திருப்புவதற்கான வாய்புக்கள் அதிகம் இருப்பதால் காவல்துறையால் உரிய விதத்தில் விசாரணை மேற்கொண்டு நீதியை பெற்று தர வேண்டும் என பாதிக்கப்பட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரணடைய சென்றவர்கள் மீது சினிமா பாணியில் காவல் நிலையத்துக்கு முன்பாகவே விபத்தை ஏற்படுத்திய சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


