திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்திப் பவனிமீது காடையர் குழு தாக்குதல்
திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி மீது காடையர்குழு மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தியாகி திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஊர்திப் பவனி 03 ஆம் நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்திப் பயணம்
பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரையான தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்திப் பயணம் பொத்துவிலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட ஊர்திப் பயணம் நேற்று மட்டக்களப்பு வாகரையில் நிறைவடைந்தது
திருகோணமலை மூதூர் கட்டைபறிச்சான் பிரதேசத்தில் இன்றையதினம் ஆரம்பித்த ஊர்திப் பவனி அங்கிருந்து ஆலங்கேணி தம்பலகாமம் ஊடாக திருகோணமலை நகருக்குள் பிரவேசித்தவேளை 50 ற்கும் மேற்பட்ட இராணுவ புலனாய்வாளர்கள் வந்து பாதுகாப்பிற்காக செல்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
கப்பல்துறை முக சந்திக்கருகில் சென்றவேளை
ஊர்திப்பவனி கப்பல்துறை முக சந்திக்கருகில் சென்றவேளை முதலாவதாக கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.அதனைத் தொடர்ந்து சர்தாபுர சந்தியில் வாகனங்கள் மீதும் தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டார்.வாகனங்களில் இருந்தவர்களும் இழுத்து வீழ்த்தப்பட்டு தாக்கப்பட்டார்கள்.
காவல்துறை மற்றும் 25 ற்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் பார்த்திருக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என ஊர்திப்பவனியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.