நாட்டை இராணுவ மயமாக்க முயற்சி - எதிர்க்க ஓரணியில் அணிதிரளுமாறு அழைப்பு
நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்திருக்கும் சூழ்நிலையில் அரசாங்கம் நாட்டை இராணுவ மயமாக்க முயற்சி செய்து வருவதாக தமக்கு சந்தேகம் நிலவுகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் (V. Radhakrishnan) தெரிவிக்கின்றார்.
இன்று பதுளையில் உள்ள மலையக மக்கள் முன்னணி தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாட்டின் அனைத்து திணைக்களங்களினதும் அரச நிறுவனங்களினதும் செயலாளர் பதவிகள் அரச நிர்வாக சேவை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் படுவதற்கு பதிலாக ஓய்வுபெற்ற இராணுவ உயரதிகாரிகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. இராணுவ அதிகாரிகள் நன்றாக யுத்தம் செய்யும் திறமை பெற்றவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
எனினும் அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் போன்று பொருளாதார ரீதியாக தீர்மானம் எடுக்கக் கூடிய அனுபவமும், இயலுமையும் அவர்களிடம் இல்லை. இதன் காரணமாக இன்று நாடு அதாள பாதாளத்தில் வீழ்ந்து - மீண்டு எழ முடியாத நிலையில் உள்ளது.
அனைத்து துறைகளும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையால் இராணுவமயத்திலிருந்து மீண்டு ஜனநாயகத்தை நிலைநாட்ட நாட்டு மக்கள் ஒன்று திரண்டு வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்.
அரசாங்கத்திற்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களில் இன்று எவரும் அரசாங்கத்துடன் இல்லை.
எனவே நாம் விரைவில் புதிய அரசியல் மாற்றத்திற்கு தயாராகி, இழந்த உரிமைகளை வென்றெடுக்க ஓரணியில் அணி திரள்வோம் என அழைப்பு விடுக்கின்றேன்” என்றார்.