திருகோணமலையில் துப்பாக்கி முனையில் நடந்த திருட்டு முயற்சி முறியடிப்பு!
திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால் மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சியை அங்கிருந்த ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (18) இரவு 9:45 அளவில் உந்துருளியில் வந்த இரு கொள்ளையர்கள், பணத்தைத் திருடித் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். எனினும், ஊழியர்களின் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பணப் பையுடன் கொள்ளையர்களில் ஒருவரைப் பிடிக்க முற்பட்டனர்.
அந்தச் சமயத்தில், துப்பாக்கி வைத்திருந்த மற்றைய நபர் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும் இலக்கு தவறியது. அதனைத் தொடர்ந்து, இரு கொள்ளையர்களும் உந்துருளியில் ஏறி அனுராதபுரம் வீதி வழியாகத் தப்பிச் சென்றனர்.
இரண்டு சந்தேகநபர்களும் கைது
எனினும், இந்த சம்பவம் குறித்து உடனடியாகச் செயற்பட்ட காவல்துறையினர், திடீர் தேடுதல் நடவடிக்கையை நடத்தி மிஹிந்துபுர பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

குறித்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் உப்புவெளி காவல் நிலையத்தில் கடமையாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.
குறித்த இருவரும் மது போதையில் இருந்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |