மக்கள் வராவிட்டால் போராட்டக்களத்தை விட்டு வெளியேறுவோம்! தம்ம சுஜாத தேரர் பகிரங்க அறிவிப்பு
காலி முகத்திடல் போராட்டத்திற்கு மக்கள் நாளை (09) வராவிட்டால் தானும் ஏனைய மக்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்ட களத்தில் தங்கியுள்ள தம்ம சுஜாத தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முதலில் இந்த போராட்ட களத்தில் இருந்த மக்கள் கூட்டத்தையும் இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள் என அவதானிக்குமாறு கூறியுள்ளார்.
அதேவேளை, நாளை ஓகஸ்ட் 9 ஆம் திகதி, இந்த மண்ணில் இதுவரை நடத்திய போராட்டத்திற்கு பலன் கிடைக்காவிட்டால் நாளைய தினமே இந்த போராட்டத்தை நிறுத்துவோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெடிக்கும் என எண்ணிய போராட்டம்
கடந்த மாதம் 09 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தினால் முன்னாள் அதிபர் கோட்டாபய ராயபக்ச நாட்டைவிட்டு தப்பியோடியதுடன் தனது அதிபர் பதவியில் இருந்தும் விலகினார்.
இதனையடுத்து, நாளைய தினமான ஓகஸ்ட் 09 ஆம் திகதி சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவித்திருந்தனர்.
அதேவேளை, நாளையதினம் கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமை தாங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நாளை காலிமுகத்திடலில் போராட்டம் வெடிக்கும் என எண்ணிய நிலையில் தற்போது அங்கு போராட்டகாரர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.