செம்மணியில் நடந்த அட்டூழியங்கள் : நீதி கோரி அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த குரல்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள செம்மணி மனிதப் புதைகுழிகளிலிருந்து வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காக அவுஸ்திரேலிய செனட் உறுப்பினர்கள், அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியா (Australia) நாடாளுமன்றத்தில் இது தொடர்பான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணியில் மேற்கொள்ளப்படும் தடயவியல் அகழ்வுகளின் போது, சிறுவர்களின் எச்சங்கள், அவர்களின் பாடசாலைப் பைகள் உட்பட அட்டூழியங்களுக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டெடுப்புக்கள், சர்வதேச சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள புதைகுழிகள்
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பிறகும் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்ற அவசர கோரிக்கைகளை மீண்டும் எழுப்பியுள்ளது என்று அவுஸ்திரேலிய செனட் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், இந்த விடயத்தில், அவுஸ்திரேலிய அரசு, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செனட்டர்கள், அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், இலங்கையில் உள்ள செம்மணி மற்றும் பிற புதைகுழிகள் குறித்து சர்வதேச அளவில் கண்காணிக்கப்படும் தடயவியல் விசாரணைக்கு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை
ஐக்கிய நாடுகளின் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் நீடிப்பை ஆதரிக்க வேண்டும். போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக நம்பகத்தன்மையுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட தடைகளைச் செயற்படுத்த வேண்டும்.
அதேநேரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஒரு பார்வையாளராக, இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மற்றும் பாதுகாப்புச் சபைக்கு அனுப்பும் தீர்மானங்களை ஆதரிக்க வேண்டும் என்று செனட்டர்கள் கோரியுள்ளனர்.
இந்தநிலையில் தமிழ் புலம்பெயர்ந்தோர், அவுஸ்திரேலிய சமூகத்துக்கு நிறையவே பங்களித்துள்ளனர். எனவே, அவர்களின் நீதிக்கான கோரிக்கைகள் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டியது அவுஸ்திரேலியாவின் பொறுப்பு என்று அந்த நாட்டு செனட்டர்கள் அவுஸ்திரேலிய அரசை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
