இலங்கைக்கு கிடைத்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் விருது
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் (WHO) வழங்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான உலக புகைத்தல் தடுப்பு தினத்திற்கான விருது இலங்கைக்கு (Sri Lanka) கிடைத்துள்ளது.
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் (Ramesh Pathirana) மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்திற்கு குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டது.
விகாரமஹாதேவி பூங்காவில் நேற்று (07) நடைபெற்ற உலக புகையிலை தடுப்பு தினத்தை கொண்டாடும் தேசிய நிகழ்விலேயே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டது.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்
சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உலக சுகாதார ஸ்தாபனம் ஒவ்வொரு ஆண்டும் புகையிலை கட்டுப்பாட்டுத் துறையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சிறந்த பங்களிப்பை புகையிலை தடுப்பு தின விருதுகள் மூலம் அங்கீகரிக்கின்றது.
அந்தவகையில், 2024ஆம் ஆண்டிற்கான விருது மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
புகையிலை பாவனையினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் புகையிலை நிறுவனத்தின் தந்திரோபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட உலகளாவிய திட்டமே உலக புகைத்தல் தடுப்பு தினமாகும்.
புகையிலை தடுப்பு தினம்
இத்தினமானது, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ஆம் திகதி உலக புகையிலை தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
இதன்படி, இந்த வருடத்தின் தொனிப்பொருளில் 'புகையிலை கைத்தொழிலின் தந்திரோபாயங்களிலிருந்து சிறுவர்களையும் இளைஞர்களையும் பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளன் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில், சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல (Seetha Arambepola), உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி அலகா சிங், சுகாதார அமைச்சின் செயலாளர் பி.ஜி. மஹிபால, புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் டொக்டர். அலன் லுடோவிக், சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் சமிந்தி சமரகோன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |